அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி - தம்பதி மீது வழக்குப்பதிவு
காவல் நிலையம்
மதுரை சின்ன உடைப்பு வடக்கு தெருவை சேர்ந்த 68 வயதான முதியவர் பெரியசாமி .அப்பகுதியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றார். இவரது வீட்டிற்கு தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை ஜே ஆர் ஆர் நகர் பகுதியில் வசித்து வரும் ராஜாங்கம் மற்றும் அவரது மனைவி பாண்டியம்மாள் ஆகிய இருவரும் வந்து தாங்கள் அரசியல் செல்வாக்கு மிக்க நபர்கள் எனவும் தனக்கு அரசு அதிகாரிகள் நல்ல பழக்கம் உள்ளதாகவும் ஆசை வார்த்தை கூறி முதியவர் பெரியசாமியின் மகன் ஜெகதீசன் என்பவருக்கு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணி வாங்கித் தருவதாக கூறி மேற்படி வேலைக்கு 5 லட்சம் கொடுத்தால் உடனடியாக பணி நியமன ஆணை பெற்று கொடுப்பதாகவும் பணத்தை ஏற்பாடு செய்துவிட்டு தன்னை சந்திக்கும்படி கூறியுள்ளனர்.
இதனை நம்பி முதியவர் பெரியசாமி 30.1.22 ம் தேதி இரவு 8 மணி அளவில் ராஜாங்கம் மற்றும் பாண்டியம்மாள் ஆகியோரது வீட்டிற்கு சென்று முதல் தவணையாக பணம் ரூபாய் 2,70,000 கொடுத்துள்ளனர். அதன்பின்பு 76,000 பணத்தை ராஜாங்கம் என்பவரது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். மீதி பணம் 1,54000 ரூபாயை ராஜாங்கம் கையில் கொடுத்துள்ளார்.பணத்தைப் பெற்றுக் கொண்ட ராஜாங்கம் மற்றும் அவரது மனைவி பாண்டியம்மாள் பணி நியமன ஆணை தபாலில் உங்களுக்கு வந்து விடும் என்ற நம்பிக்கை கொடுத்துள்ளனர் .
அதன்பின் ராஜாங்கம் மற்றும் பாண்டியம்மாள் ஆகியோர் இதுபோன்று பல நபர்களிடம் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளது முதியவர் பெரியசாமியின் குடும்பத்திற்கு தெரிய வந்துள்ளது.
அதன் பேரில் முதியவர் பெரியசாமி தென்கரை காவல் நிலையத்தில் ராஜாங்கம் மற்றும் அவரது மனைவி பாண்டியம்மாள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி கொடுத்த புகாரின் பேரில் தென்கரை காவல்துறையினர் விசாரணை செய்ததில் ராஜாங்கம் அவரது மனைவி பாண்டியம்மாள் அரசு வேலைக்காக செலவு செய்த தொகை போக மீதி பணம் ரூபாய் 396000 பணத்தை கொடுத்து விடுவதாக தெரிவித்து அதில் 40000 மட்டுமே முதியவர் பெரிய சாமியிடம் கொடுத்துள்ளனர். மீதி பணம் ரூபாய் 3,56,000 பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும் எனவே அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி மோசடி செய்த ராஜாங்கம் மற்றும் அவரது மனைவி பாண்டியம்மாள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி முதியவர் பெரியசாமி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கொடுத்த புகார் மனுவை தென்கரை காவல் துறையினர் பார்வையிட்டு ராஜாங்கம் மற்றும் அவரது மனைவி பாண்டியம்மாள் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.