தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.6½ லட்சம் மோசடி
மாவட்ட காவல் அலுவலகம்
வேலூரை சேர்ந்த 43 வயது நபர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது செல்போனுக்கு டெலிகிராமில் இருந்து பகுதி நேர வேலை தொடர்பாக குறுந்தகவல் வந்தது. அதில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து சில பணிகளை செய்து முடித்தால் பணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதை நம்பிய அவரும் அதை பதிவிறக்கம் செய்து அந்த செயலியில் கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து ரூ.1,060 கமிஷனாக பெற்றார். தொடர்ந்து அவரிடம் பேசிய மர்மநபர்கள் அந்த செயலியில் முதலீடு செய்து பணிகளை செய்து முடித்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று தெரிவித்தனர். இதைநம்பிய அவரும் முதலீடு செய்து பணிகளை செய்து முடித்தார்.
அவர் ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்து 192 வரை பணத்தை செலுத்தினார். ஆனால் அவரால் அந்த பணத்தை எடுக்க முடியவில்லை. அவர் மர்மநபர்களை தொடர்பு கொண்டபோது மேலும் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் புனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.