ராமநாதபுரத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்

ராமநாதபுரத்தில் நடந்த மருத்துவ முகாமில் பங்கேற்ற குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற இலவச சுகாதார முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு கொச்சி அம்ருதா மருத்துவமனை சார்பில் இலவச இதய பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளில், சுமார் 31 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை அல்லது இதர சிகிச்சைகள் வழங்கப்பட்டன என்றும் நோய் பாதிப்புகள் கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு கொச்சியில் உள்ள அம்ருதா மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டன என்றும் இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலாஜி ஸ்ரீமுருகன், பிரம்மச்சாரி நிகிலேஷாமிருத சைதன்யா மற்றும் பிரம்மச்சாரிணி லட்சுமி ஆகியோர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அம்ருதா மருத்துவமனையில் இலவச இதய அறுவை சிகிச்சை மற்றும் இதர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ராமநாதபுரத்தில் உள்ள அம்ருதா வித்யாலயத்தில் டிசம்பர் 3, 2023 அன்று நடத்தப்பட்ட மருத்துவ முகாமில், இதய நோயால் கண்டறியப்பட்ட 28 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை மற்றும் பிற சிகிச்சைகள் வழங்கப்பட்டன. தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகள் பங்கேற்ற இந்த முகாமில் சுமார் 300 குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதய நோய்கான அடையாளம் காணப்பட்ட 31 குழந்தைகளில், 28 குழந்தைகளுக்கு உடனடி நடைமுறைகள் தேவைப்படும் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டனர். இவர்களில் 16 பேர் அறுவை சிகிச்சைக்கும், 12 பேர் மற்ற சிகிச்சை நடைமுறைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர். அறுவை சிகிச்சை தேவையில்லாத மூன்று குழந்தைகள் மருத்துவ ஆலோசனைக்கு பிறகு வீடு திரும்பினர். இந்த மருத்துவ முகாம்கள் குழந்தைகள் இதய சிகிச்சை பிரிவால் நடத்தப்பட்டது. ராமநாதபுரம், விருதநகர் மற்றும் திருச்சிராப்பள்ளியில் முகாமுக்குத் தலைமை தாங்கிய குழந்தை இருதயவியல் துறைத் தலைவர் டாக்டர் ஆர். கிருஷ்ண குமார், சிகிச்சைக்காக அடையாளம் காணப்பட்டவர்களில் பலருக்கு கடுமையான இதயம் சார்ந்த நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நடந்த முகாமையும் அவர் வழிநடத்தியுள்ளார். இந்த முகாம்களில் கண்டறியப்பட்ட, இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கொச்சியில் உள்ள அம்ருதா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தை இருதய சிகிச்சை பிரிவில் அறுவை சிகிச்சைகளை வழிநடத்தும் டாக்டர் பி.கே.பிரிஜேஷ், “மாதா அம்ருதானந்தமயி தேவியின் மருத்துவமனையில் அளிக்கப்படும் இலவச அறுவை சிகிச்சைகள், இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் இந்த குழந்தைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது” என்று கூறியுள்ளார். ஜெனிசிஸ் அறக்கட்டளை மற்றும் HDFC எர்கோ இணைந்து குழந்தைகளுக்கான மருத்துவத் தலையீடுகளை ஏற்று நடத்தின. அம்மா, மாதா அம்ருதானந்தமயி தேவியின் 70வது பிறந்தநாள் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதய நோய் பாதிப்புகளைக் கண்டறிய, 2024 ஜூன் மாதம் நாகர்கோவிலில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும்.

Tags

Next Story