வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி

 நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி  

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்விற்கு இலவச விரைவுப் பயிற்சி மற்றும் தேர்வு, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டத்தின்படி நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் துவங்கப்பட்டு நடக்கிறது.

2023 ஆம் ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கான இலவச நேரடி விரைவுப் பயிற்சி மற்றும் திருப்புதல் தேர்வு திங்கட்கிழமை தோறும் காலை 10.30 - 1.30 மணி வரை பயிற்சி வகுப்பு நடக்கிறது. ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. நடத்தப்பட்ட பாடத் திட்டத்திற்கான முழுதேர்வு வியாழக்கிழமை தோறும் காலை 10.30 - 1.30 மணி வரை நடைபெற உள்ளது.

பயிற்சியில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ, அல்லது ஆன்லைன்கிளாஸ்என்கேஎல்அட்ஜிமெயில்.காம் என்ற இ-மெயில் மூலமோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுய விவரத்தினை பதிவு செய்து பயன்பெறலாம்.

இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வரவேண்டும். நமது தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்ற மாணவர்கள் தற்போது நடைபெற்ற குரூப் 2 பிரிலிமினரி தேர்வில் 37 பேர் தேர்ச்சிப்பெற்று முதன்மை தேர்வு எழுதியுள்ளனர். டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில் 17 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வாகியுள்ளனர். 2023 ஆம் ஆண்டு சீருடைப்பணியாளர் தேர்வில், உடற்தகுதி தேர்வில் 24 நபர்கள் கலந்து கொண்டு தற்பொழுது நேர்முகத்தேர்வுக்காக காத்திருக்கின்றனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story