ராமநாதபுரம்: வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்
இலவச ஹெல்மெட்
ராமநாதபுரம் பரமக்குடியில் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. டூவீலரில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிதல், கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும், சாலை விதிகளை பின்பற்றி பயணம் செய்ய வேண்டும் உள்ளிட்டவை குறித்து தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து ஹெல்மெட் அணிந்து டூவீலரில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பரமக்குடி ஓட்ட பாலம் பகுதியில் தொடங்கி ஐந்து முனை, பேருந்து நிலையம் என நகரின் முக்கிய வீதிகளில் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழிப்புணர்வு ஊர்வலத்தை சார் ஆட்சியர் அபிலாஷா கௌர் மற்றும் பரமக்குடி டிஎஸ்பி சபரிநாதன் இருவரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் மோட்டார் வாகன ஆய்வாளர் பத்மப்பிரியா, பரமக்குடி தாசில்தார் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சாலையில் ஹெல்மெட் இன்றி டூவீலரில் வந்தவர்களுக்கு ஹெல்மெட் இலவசமாக வழங்கப்பட்டது. அப்போது ஹெல்மெட் இல்லாமல் டூவீலரில் வந்த ஒரு பெண்ணிற்கு மோட்டார் வாகன ஆய்வாளர் பத்மப்பிரியா ஹெல்மெட் மாட்டிவிட்டு அறிவுரைகளை வழங்கினார்.