சேலத்தில் பழவிலை உயர்வு
சேலம் மாவட்டத்தில் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக கடந்த 3 வாரங்களுக்கு மேலாக தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் அளவு பதிவாகி வருவதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். வேலை மற்றும் பல்வேறு தேவைகளுக்கு வெளியே செல்லும் பொதுமக்கள், சாலையோர கடைகளில் இளநீர், மோர், பழச்சாறு போன்றவற்றை அருந்தி தங்களது தாகத்தை தணித்துக்கொள்கிறார்கள்.
சேலம் கடைவீதி, செவ்வாய்பேட்டை, அஸ்தம்பட்டி, பால் மார்க்கெட், சூரமங்கலம், சின்னக்கடை வீதி, முதல் அக்ரஹாரம் பகுதிகளில் உள்ள கடைகளில் அனைத்து வகையான பழங்களும் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் கடந்த மாதம் ஒரு கிலோ தர்பூசணி ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது தர்பூசணி கிலோவுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.30 ஆக உள்ளது.
அதேபோல் ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சாத்துக்குடி தற்போது ரூ.100 ஆகவும், ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மாதுளை ரூ.40 அதிகரித்து ரூ.240 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ஆப்பிள் ரூ.200-ல் இருந்து ரூ.240 ஆகவும், ஒரு கிலோ ஆரஞ்சு ரூ.160-ல் இருந்து ரூ.180 ஆகவும், பச்சை திராட்சை ரூ.100-க்கும், பன்னீர் திராட்சை ரூ.110-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிலோ கமலா ஆரஞ்சு ரூ.140-க்கும், மாம்பழத்தை பொறுத்தவரையில் சீசன் களை கட்ட தொடங்கியுள்ளதால் ரகத்திற்கு ஏற்றவாறு விலை நிர்ணயம் செய்து விற்கப்படுகிறது.