முழு நேர ரயில் முன்பதிவு மையம் - எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகள் என, 350 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அவற்றில், தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான வடமாநிலத்தவர்களும் வேலை பார்த்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இங்கிருந்து வெளியூர்களுக்கும் பொதுமக்களும் வியாபாரிகளும் அதிக அளவில் சென்று வருகின்றனர். பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான வடமாநிலத்தவர்களும் வேலை பார்த்து வருகின்றனர்.
அவர்கள் பெரும்பாலும் சொந்த ஊருக்கு ரயில்களில் சென்று வருவது வழக்கம். அவர்களின் வசதிக்காக, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் கணினி முன்பதிவு மையம், தனி கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த மையம், காலை, 8:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை மட்டுமே இயங்கி வருகிறது. அதன்பின் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய வேண்டுமென்றால், 40 கி.மீ., தொலைவில் உள்ள திருவொற்றியூர் செல்ல வேண்டும்.
மேலும் மாலை நேரத்தில் கும்மிடிப்பூண்டி முன்பதிவு மையம் இயங்கினால், பயண நாளின் போது காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணியர் தங்கள் பயணச்சீட்டை ரத்து செய்து உடனடியாக பணத்தை திரும்ப பெற வசதியாக இருக்கும். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் நலன் கருதி கும்மிடிப்பூண்டி முன்பதிவு மையத்தை காலை 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் அனைவருடைய கோரிக்கையாக உள்ளது.