நெல் பயிரில் புகையான் தாக்குதல் - வேளாண்துறை அறிவுரை

நெல் பயிரில் புகையான் தாக்குதல் - வேளாண்துறை அறிவுரை

நெல் வயல் 

நெல் பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, உத்திரமேரூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முத்துலட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.

உத்திரமேரூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முத்துலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டாரத்தில் நவரை பருவ சாகுபடிக்கு 25,800 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். புகையான் பூச்சியானது நெல் பயிரின் அடிபாகத்தில் இருந்து கொண்டு சாறினை உறிஞ்சுவதால் பயிர்கள் முதலில் மஞ்சள் நிறமாகி, பின்னர் பழுப்பு நிறமாக மாறும். நெல் வயல், வட்ட வட்டமாக தீயில் கருகியது போல் காணப்படும்.

இதனால், மகசூல் குறையும் நிலை ஏற்படும். நெல் வயலில் இந்த பூச்சி வராமல் தடுக்க, நெல் வயல் மற்றும் வரப்புகளில் களைச் செடிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பயிருக்கு போதுமான சூரிய ஒளி மற்றும் காற்று கிடைப்பதால் பூச்சிகள் வளர்ச்சி அடைய தேவையான சூழல் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. மேலும், வயலில் உள்ள தண்ணீரை நன்கு வடித்து விட்டு வேர்களில் படும்படி பூப்பதற்கு முன், அசாடிராக்டின் ஏக்கருக்கு 400 மில்லி, பாசலான் 35 இ.சி., 600 மில்லி, குளோரோபைரிபாஸ் 20 இ.சி., 600 மில்லி, பியுப்ரோசன் 25 சதவீதம், டைகுளோரோவாஸ் 76 சதவீதம், பைப்பரினில் 5 சதவீதம், பாஸ்போமிடான் 350 மில்லி, ட்ரைஅசேபாஸ் 40 சதவீதம், இம்மருந்துகளில் ஏதேனும் ஒன்றை வயலில் தெளித்து புகையான் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story