காந்தி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

காந்தி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

கடையடைப்பு போராட்டம்

திருச்செந்தூர் காந்தி தினசரி மார்க்கெட் வியாபாரிகளுக்கு புதிய கட்டிடத்தில் கடைகள் வழங்காமல் பொது ஏலம் விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் , திருச்செந்தூரில் காந்தி தினசரி மார்க்கெட் கடந்த 24 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் அப்பகுதியில் திருச்செந்தூர் நகராட்சி சார்பில் ரூ.3 கோடியே 95 லட்சம் மதிப்பில் புதியதாக 152 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கடைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொது ஏலம் விடப்பட்டன. இதனால் ஏற்கனவே கடை நடத்தி வந்த வியாபாரிகளுக்கு புதிய கட்டிடத்தில் கடைகள் கிடைக்கவில்லை. இதனால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில் ஏற்கனவே கடை நடத்தி வரும் வியாபாரிகளிடம் கடந்த 1-ந் தேதி முதல் தரை வாடகை வசூல் செய்யப்படவில்லை. இதையடுத்து, புதிய கட்டிடத்தில் கடைகளை ஏலம் விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தினசரி மார்க்கெட் வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் மார்க்கெட்டில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மேலும் வியாபாரிகள் அப்பகுதியில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்தனர்.

இதையடுத்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். தேர்தல் நடந்தை விதிமுறைகள் நடைமுறைகள் இருப்பதால் உண்ணாவிரதம் இருக்க அனுமதி இல்லை என அவர் தெரிவித்தார். பின்னர் கடையடைப்பு போராட்டம் நடத்திய வியாபாகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆணையரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story