கார் டிரைவரை கடத்திய கும்பல் - போலீசை கண்டதும் எஸ்கேப்
கன்னியாகுமரி சுவாமிநாதபுரத்தை சேர்ந்தவர் நாகராஜன் (43). சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். சம்பவ தினம் இவர் தனது காரில் கன்னியாகுமரி முருகன் குன்றம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக மற்றொரு காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று நாகராஜன் காரை வழிமறித்தது காருக்குள் இருந்து அவரது செல்ஃபோன் கார் சாவியை அந்த கும்பல் பறித்தது. பின்னர் நாகராஜனை சரமாரியாக தாக்கி கன்னியாகுமரி நோக்கி கடத்தி சென்றனர்.
உடனடியாக ரூபாய் 30 ஆயிரம் தந்தால்தான் உயிருடன் விடுவதாக கூறியுள்ளனர். கன்னியாகுமரி போலீஸ் நிலையம் அருகே கார் சென்ற போது, அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதனை கண்ட அந்த கும்பல் நாகராஜனை விட்டுவிட்டு அந்த தப்பி ஓடியது. இது குறித்து நாகராஜன் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடைபெறுகிறது. இந்த சம்பவம் ஏற்கனவே முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா ? அல்லது வேறு காரணங்களை ஏதாவது உண்டா என்று கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.