காங்கேயம் மடவளாகம் அங்காளம்மன் குண்டம் - 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் 98 வது மஹாசிவராத்திரி மற்றும் அக்னி பூக்குண்ட திருவிழா இன்று அதிகாலை வெகு விமர்சையாக நடைபெற்றது .

காங்கேயம் அருகே 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மடவளாகம். இங்கு ஸ்ரீ அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. இங்குள்ள சுவாமி சிலையின் வயது 655 வயது என்கின்றனர் பக்தர்கள். கவுண்டர், முதலியார், நாய்க்கர், ஐயர்,செட்டியார், ஆகிய இனத்தவர்களுக்கு குலதெய்வமாக வணக்கப்படுகின்றது. 205 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் 150க்கும் மேற்பட்ட மடங்கள் இருந்ததால் இப்பகுதிக்கு மடவளாகம் என பெயர் வரக் காரணம் என்கின்றனர். கடந்த 07ம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கிய கோவில் திருவிழா நேற்று முன்தினம் மயான பூஜை மற்றும் மஹாசிவராத்திரி பூஜைகள் நடைபெற்றது.

நேற்று அழகு தரிசனம் மற்றும் இரவு 7 மணிக்கு அக்னி பூக்குண்டம் ஆரம்பம் ஆனது.அதன் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் இன்று அதிகாலை முக்கிய நிகழ்வாக அக்னி பூக்குண்டம் இறங்குதல் நடைபெற்றது. இக்குண்டமானது சுமார் 60 அடி நீளம் உடையது. கொங்கு மண்டலத்தில் அதிக நீளமான குண்டமும் இதுவே ஆகும். இங்கு 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து, கங்கணம் கட்டி குண்டம் இறங்கினர்.

மேலும் குண்டத்திருவிழா இறுதியில் அங்காளம்மன் சப்பரத்தில் குண்டம் இறங்கியவுடன் நிறைவு அடைந்தது. இக்கோவிலுக்கு கர்நாடக ,ஒரிசா, ஆந்திரா, கேரளா, போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் திருப்பூர்,ஈரோடு,நாமக்கல்,கரூர்,கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். கோவிலின் விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.

குண்டம் இறங்கும் பக்தர்களின் பாதுகாப்பிற்கு காங்கேயம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் குண்டம் நடைபெறும் இடத்தின் இருபுறமும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். காங்கேயம் பகுதியில் நடைபெறும் அங்காளம்மன் குண்டத்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்த வரிசையில் அதிகாலை நேர முதல் காத்திருந்தனர்.

Tags

Next Story