டாஸ்மாக் பார்களில் போலி மதுபானம் விற்பனை செய்யும் கும்பல்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பெருமகளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களில் அதிகளவில் போலி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக, மத்திய மண்டல நுண்ணறிவுப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் காசிவிஸ்வநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில், ஆய்வாளர் ராமன், பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலாகப் பிரிவு ஆய்வாளர் ஜெயா ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணையில் இறங்கினார்.
அப்போது பெருமகளூரில் உள்ள பெட்டிக் கடை ஒன்றில், சோடா பாட்டில்களுடன் போலி மதுபானங்களை இறக்கி கொண்டிருந்த, வாகன ஒட்டுநரான பாலமுருகன் (37), என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் பேரில், பெருமகளூரை சேர்ந்த ராஜ்குமார் (48), என்பவரையும் பிடித்து நடத்திய விசாரணையில்,
புதுக்கோட்டை மாவட்டம் அமரசிம்மேந்திரபுரம் சங்கர்(49), மச்சுவாடி மாரிமுத்து (48), ஆகியோர் தான் போலி மதுபானங்களை தயாரித்து புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களில் விநியோகம் செய்வதாக தெரிவித்தார். பிறகு, மதுபான தயாரிப்பு கும்பலில் முக்கிய நபர்களான சங்கர் மற்றும் மாரிமுத்து இருவரையும் நுண்ணறிவுப் பிரிவினர் வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மாரிமுத்து சிவகங்கை மாவட்டத்தில் போலி மதுபானம் தயாரித்து, பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்த நிலையில், நுண்ணறிவு பிரிவினர் அவரை பிடிப்பதற்கு தீவிரம் காட்டினர். இதையறிந்த மாரிமுத்து, போலி மதுபானம் தயாரிக்கும் குடோனை மூடி விட்டு அங்கிருந்து தப்பித்தார். பிறகு, சிவகங்கையில் இருந்து எடுத்து வந்த போலி மது தயாரிக்கும் மூலப்பொருட்களான எசன்ஸ், லேபிள், ஸ்டிக்கர், மூடிகள், மூடிகளை லாக் செய்யும் மெசின், ஸ்பிரிட் ஆகியவற்றை,
புதுக்கோட்டை மாவட்டம் அணவயல் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் தென்னந்தோப்பில், உள்ள மோட்டார் கொட்டகையில் பதுக்கி வைத்து இருந்தது விசாரணையில் தெரியவந்தது. மாரிமுத்து மீது ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. அதன் பேரில், அங்கிருந்த 624 போலி மதுபானம் பாட்டில்கள், போலி மதுபானம் தயாரிப்பதற்கான இயந்திரம், சுமார் 850 லிட்டர் ஸ்பிரிட், 3,250 காலி பாட்டில், 6,000 போலி ஸ்டிக்கர் மற்றும் வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த மதுவிலக்கு காவல்துறையினர் மாரிமுத்து, சங்கர், ராஜ்குமார், பாலமுருகன் ஆகிய நான்கு பேரையும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
டாஸ்மாக் மூடிய பிறகு, இரவு 10 மணிக்கு மேல், மறுநாள் காலை 11 மணி வரையிலும், பார்களில் கட்டிங் கேட்டு வரும் நபர்களிடம் இந்த போலி மதுபானங்களை பார் உரிமையாளர்கள் விற்பனை செய்வதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.