பேருந்தில் கஞ்சா கடத்தல் - சகோதரிகள் கைது, 32 கிலோ பறிமுதல்
ஆந்திராவில் இருந்து சேலம் வழியாக ஈரோடுக்கு கஞ்சா கடத்தி செல்வதாக மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாபு சுரேஷ்குமார் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், செல்வம் மற்றும் போலீசார் நேற்று சேலம் புதிய பஸ்நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, சேலத்தில் இருந்து ஈரோடு செல்வதற்கு புறப்பட தயாராக இருந்த அரசு பஸ்சில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த 2 பெண்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் வைத்திருந்த பைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் 32 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள அந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர்கள் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த செல்வி (வயது 54), இவரது தங்கை சாந்தி (53) என்பதும், இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி ரெயில் மூலம் சேலத்திற்கு வந்ததும், அதன்பிறகு சேலத்தில் பஸ்சில் கஞ்சாவை ஈரோடுக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அக்காள், தங்கை ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.