வாடகை டிராக்டரில் குப்பைகள் சேகரிப்பு - பேட்டரி வாகனங்கள் வருமா?

சிவகாசி அருகே ஆனையூர் ஊராட்சிக்கு புதிய குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள் வழங்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஆனையூர் ஊராட்சியில் 33 குக்கிராமங்கள் உள்ளன.இந்த ஊராட்சியில் சுமார் 13ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருக்கும் வீடுகள் உள்ள நிலையில் பொதுமக்கள் பெரும் நெருக்கடியோடு வாழ்ந்து வருகின்றனர்.ஒவ்வொரு குக்கிராமங்களிலும் குப்பை அள்ள போதிய சுகாதார வாகனங்கள் இல்லாததால் ஊராட்சியில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கின்றன.

4 ஆண்டுகளுக்கு முன்பு தூய்மைப் பணிகளுக்காக 12 மூன்று சக்கர பேட்டரி குப்பை வாகனங்கள் வழங்கப்பட்டன இந்தப் பேட்டரி வாகனங்கள் மூலம் ஒவ்வொறு தெருவிலும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு சாட்சியாபுரம்,திருப்பதிநகர், கட்டளைபட்டி,இந்திரா,முனீஸ், சிவானந்த நகர் ஆகிய பகுதிகளில் குப்பைகளை தேக்கி வைக்கப்பட்டு,காட்டுப்பகுதியில் கொட்டப்பட்டு வந்தன.இந்த பேட்டரி வாகனங்கள் அனைத்தும் தற்போது பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் கிடக்கின்றன.

ஆனையூர் ஊராட்சி நிர்வாகம் தனியார் டிராக்டர் மூலம் குப்பைகளை அப்புறப்படுத்தி வரும் நிலையிலும் முழுமையாக குப்பைகளை அப்புறப்படுத்த முடியவில்லை.குப்பைகள் தேங்கி கிடக்கும் நிலையில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே ஆனையூர் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட 18 புதிய பேட்டரி வாகனங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags

Next Story