சாலையில் கொட்டப்படும் கழிவுகள் - பொதுமக்கள் அவதி
சாலையில் கொட்டப்படும் கழிவுகள்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு - திருவத்திபுரம் நகராட்சியில் வசிக்கும் பல ஆயிரக்கணக்கான மக்களும், வெளியூர் வாசிகளும், வியாபாரிகள், அலுவலர்கள்,மாணவர்கள் என தினமும் பயணிக்கும் பிரதான டோல்கேட் பைபாஸ் திருப்பத்தில் உள்ள சாலையோரங்களில்சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் கழிவுகளை தனிமனித ஒழுக்கமின்றி கொட்டியபடி இருக்கின்றனர். நகராட்சி இவற்றைக் கண்டும் காணாமல் இருப்பது வேதனை அளிப்பதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதை தடுக்க வழி காண முடியாதா என சமூக ஆர்வலர்கள் உள்ளாட்சி நிர்வாகத்திடமும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடமும் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிய வருகிறது என்றாலும் கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுவது என்பது தொடர் கதையாக உள்ளது. அனைத்து வகையான இறைச்சி கழிவுகள் மட்டும் இன்றி,மக்காத பிளாஸ்டிக் குப்பைகள், இறந்த கால்நடைகளின் உடல்கள் என அனைத்தையும் திறந்த வெளியிலும், மூட்டைக்கட்டியும் போகிற போக்கில் போட்டு விட்டு திரும்பிப் பார்க்காமல்சென்று விடுகின்றனர்.
நாய்கள் அவற்றை கிளறி நாற்றத்தை தெளிப்பதாய் உள்ளது. பொதுமக்கள் அவ்வழியாக பயணிக்கும் போது முகம் சுளித்துக் கொண்டும், மூக்கை பிடித்துக் கொண்டும் வேதனையுடன் செல்வது வாடிக்கையாகிவிட்ட நிலையில் நகர சுகாதாரத்தையும் ,பொது சுகாதரத்தையும் விரும்பும் நகராட்சி நிர்வாகம் கிடப்பில் போடுவதும், வேடிக்கை பார்ப்பதும் தொடரக்கூடாது என்று எதிர்பார்க்கின்றனர். மேலும் பொது சுகாதார சீர் கேட்டிற்கு ஊறு விளைவிப்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது சுகாதாரத்தை நேசிக்கும் மனிதநேயம் மிக்கவர்கள் எதிர்பார்க்கும் கோரிக்கையாக உள்ளது.