சாலையில் கொட்டப்படும் குப்பைகள் -பொதுமக்கள், மாணவிகள் அவதி
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் இருந்து கொன்றைக்காடு வழியாக பட்டுக்கோட்டை செல்லும் சாலையில், அரசுக் கல்லூரி மாணவியர் தங்கும் விடுதி உள்ளது. இதன் அருகிலேயே முதியோர் இல்லமும் உள்ளது. இந்நிலையில் மாணவியர் விடுதிக்கு எதிரே நீண்ட காலமாக தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும், தண்ணீர் தேங்கி நின்று குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அருகிலேயே கல்லூரி மாணவியர் விடுதியும், முதியோர் இல்லமும் இருப்பதால் அங்குள்ளவர்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், அவ்வப்போது சேரும் குப்பைகளை யாரோ சிலர் தீயிட்டு கொளுத்தி செல்கின்றனர்.
இதன் காரணமாக பிளாஸ்டிக் கழிவுகளும் தீப்பற்றி எரிவதால் சாலையில் புகை சூழ்ந்து காணப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் தீ வைத்து எரிப்பதால் சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றது. எனவே, சாலையில் குப்பைகளை கொட்டாமலும், தீ வைத்து எரிக்கப்படாமலும் தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.