கழிவுநீர் கால்வாயில் தேங்கிய குப்பைகள் - சீர்கெட்ட சுகாதாரம்

கழிவுநீர் கால்வாயில் தேங்கிய குப்பைகள் - சீர்கெட்ட சுகாதாரம்

பிளாஸ்டிக் குப்பைகளால் தேங்கி நிற்கும் கழிவுநீர் 

கோலியனுாரான் கழிவுநீர் கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் நகரில் உள்ள பெரிய வாய்க்கால்களில் செல்லும் கழிவுநீர் அனைத்தும் கிழக்கு பாண்டி ரோடு, மகாராஜபுரம், தாமரைக்குளம் வழியாக சாலை அகரம், கோலியனுார் வரை சென்றடைகிறது.இந்த கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவு அடைத்து கொள்வதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், விழுப்புரம் நகரில் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகள் அருகே தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, இரவில் கொசு தொல்லைகளில் சிக்கி பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

இது மட்டுமின்றி, மழை காலங்களில் வாய்க்காலில் கழிவுநீர் நிரம்பி, குடியிருப்புகளுக்கு முன் குளமாக தேங்கி நிற்பதோடு, குழந்தைகள், முதியோர் உட்பட பலருக்கும் தொற்று நோய் ஏற்படுகிறது. இதையொட்டி, விழுப்புரம் நகராட்சி, நபார்டு வங்கி உதவியோடு ரூ.8 கோடி மதிப்பீட்டில் தெளிமேடு கிராமத்தில் துவங்கி, விழுப்புரம் வழியாக கோலியனுார் வரை, கோலியனுாரான் வாய்க்கால் சீரமைப்பு பணிகள் நடந்தது.கடந்த 2017 ம் ஆண்டு துவங்கிய இந்த பணிகள், 3 கி.மீ., துாரத்திற்கு ஒரு கி.மீ., பாலம் பணிகளும், 2 கி.மீ., 2.50 மீட்டர் அகலத்தில் கோலியனுாரான் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

இந்த பணிகள் முடிவடைந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் நகராட்சி நிர்வாகம் கோலியனுாரான் வாய்க்காலை அவ்வப்போது ஆய்வு செய்து சரியாக பராமரிக்காததால் மீண்டும் பழைய நிலைக்கு மாறியுள்ளது.இந்த கோலியனுாரான் வாய்க்கால் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்காமல் இருப்பதற்காக கோடி கணக்கில் செலவு செய்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.ஆனால், தற்போது அதிகாரிகளின் அலட்சியத்தால் மீண்டும் விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியில் உள்ள கோலியனுாரான் கால்வாய் மட்டுமின்றி நகரில் பல இடங்களில் உள்ள கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி, கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் மழைகாலங்களில் குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்களில் இருந்து வெளியேறி துர்நாற்றம், சுகாதார சீர்கேட்டால் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, நகராட்சி அதிகாரிகள் துரிதமாக கோலியனுாரான் கால்வாயில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்துவதோடு மட்டுமின்றி, அவ்வப்போது ஆய்வு செய்து பராமரிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

Tags

Next Story