பொதுத்தேர்வை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
விருதுநகர் மாவட்டம் மேல்நிலை இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர ஜெயசீலன் பேசுகையில்: 2023-2024 ஆம் ஆண்டுக்கான பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு 01.03.2024 தொடங்கி 22.03.2024 வரை நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 223 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். 98 தேர்வு மையங்களில் 10,030 மாணவர்களும், 11,760 மாணவியர்களும் என மொத்தம் 21,790 பள்ளி மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதில் 270 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இம்மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக தரை தளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், காது கேளாத வாய் பேச இயலாதார், டிஸ்லெக்சியா மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கியும், சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்தும் ஆணை வழங்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, மின்சாரம், மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்தியும், தேர்வு மைய வழித்தடங்களில் மாணவர்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் 5 இடங்களில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, 21 வழித்தடை அலுவலர்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் மூலம் 24 மணி நேரமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இத்தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வு மையங்களில் 104 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 102 துறை அலுவலர்கள், 1495 அறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதை எழுதுபவர்களாக 155 ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டு பணி மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களைக் கொண்டு 8 சிறப்பு பறக்கும்படை குழுவில் 16 உறுப்பினர்கள் மற்றும் தேர்வு மையங்களில் 123 நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு, தேர்வு மையங்களில் மாணாக்கர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கல்வித்துறை அலுவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆய்வு அலுவலர், ஊர்காவல் படைத்தலைவர் மற்றும் பிறத்துறை அலுவலர்களை கொண்டு மாவட்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டு தேர்வு மையங்கள் திடீர் ஆய்வு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 2023-2024 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் முழுதேர்ச்சி பெற வேண்டும் எனவும், அதிக மதிப்பெண்களை பெற வேண்டும் எனவும் மாணவ செல்வங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார்.