திருநின்றவூர் அருகே விபத்தில் 3ஆம் வகுப்பு மாணவி பலி!!
child Death
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் தாசர்புரம் பகுதியில் உள்ள சி எஸ் ஐ தேவாலயத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பாதிரியராக பணிபுரிந்து வருபவர் ஜோஸ் (வயது 39). இவர் தேவாலயத்திற்கு உள்ளே இருக்கக்கூடிய வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது மனைவி மலர்விழி(35). இவர் திருநின்றவூர் அடுத்த பாக்கம் அருகே காவனூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஜோபி ஜெ.கிறிஸ்டில்டா (8) என்ற மகளும், ஜோவின் (2) என்ற மகனும் உண்டு. இவர்களது மூத்த மகள் ஜோபி ஜெ.கிறிஸ்டில்டா திருநின்றவூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பாதிரியார் ஜோஸ் மோட்டார் சைக்கிளில் சென்று தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தார். அப்போது திருநின்றவூர் பகுதியில் தனியார் கம்பெனி அருகே சென்ற போது, அவரது மோட்டார் சைக்கிளுக்கு முன்பாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஜோஸ் தனது மோட்டார் சைக்கிளை கார் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டுள்ளார். அப்பொழுது நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் இருவரும் கீழே விழுந்தனர். இதில் மோட்டார் சைக்கிள் பின்னால் உட்கார்ந்து வந்த சிறுமி ஜோபி ஜெ.கிறிஸ்டில்டா தலையின் மீது பின்னால் வந்து கொண்டிருந்த கனரக லாரியின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜோஸ் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினார். இந்த விபத்தை கண்ட லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உயிரிழந்த சிறுமி ஜோபி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இந்த விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். தந்தை கண்முன் 3-ம் வகுப்பு மாணவி லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.