திருவெண்ணெய்நல்லூரில் அரசு பள்ளி விடுதியை மாணவிகள் முற்றுகை
விடுதியை மாணவிகள் முற்றுகை
திருவெண்ணெய்நல்லூரில் பரபரப்பு. அரசு பள்ளி விடுதியை மாணவிகள் முற்றுகை.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பெரியசெ வலை, சரவணம்பாக்கம், தடுத்தாட்கொண்டூர், கிரிமேடு, மணல்மேடு, ஆனைவாரி, மடப்பட்டு அரசூர், ஆனத்தூர், பேரங்கியூர், ஏனாதிமங்கலம், சித்திலிங்மடம், ஆமூர், திருவெண்ணெய்நல்லூர் என்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராமப்புற மாணவிகள் படித்து வருகிறார்கள். மாணவிகள் தங்கி படிக்கும் விதமாக, அங்கு அரசு மாணவிகள் விடுதியும் செயல்பட்டு வருகிறது. இதில் மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண் டில், இந்த விடுதியில் மாணவிகள் சேர்க்கை நடைபெறவில்லை. இருப்பினும் மாணவிகளின் பெற்றோர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், விடுதி தரப்பினர், இங்கு 100 பேர் மட்டுமே தங்கி படிக்க சேர்க்கை அனுமதி உள்ளது. அந்த வகையில் தற்போது விடுதியில் மாணவிகள் போதுமானதாக உள்ளதால், நடப்பு கல்வி ஆண்டில் யாரையும் சேர்க்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் பெற்றோர், இந்திய குடியரசு கட்சி விழுப்புரம் மாவட்ட தலைவர் இருவேல்பட்டு குமார், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் பூவை ஆறு ஆகியோர் தலைமையில் திருவெண்ணெய் நல்லூர் அரசு மகளிர் விடுதியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விடுதியில் மாணவிகள் சேர்க்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பினர். நீண்ட நேரம் ஆகியும் அதிகாரிகள் யாரும் வராததால் வெட்ட வெளியில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணியை கடந்தும் அவர்களது போராட்டம் நீடித்தது. அப்போது விடுதியின் முன்பு அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். இந்தநிலையில், திருவெண்ணைநல்லூர் தாசில்தார் ராஜ்குமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை உதவி திட்ட அலுவலர் ஜெயச்சந்திரன், மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், கூடுதலாக சீட்டு ஒதுக்கி மாணவிகள் சேர்க்கை நடைபெற நடவடிக்கை மேற்கொள்வதாக அவர்கள் உறுதியளித்தனர். இதையேற்று அவர்கள் போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர். அதன்படி, மாலை 4.30 மணியளவில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story