பொதுசாலைக்கு பட்டா கொடுங்க - விஏஓவை மிரட்டிய இருவர் கைது!
காவல்துறை விசாரணை
புதுகோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் ஆவூர் ஊராட்சி வடக்கு புதுப்பட்டியில் சுமார் 80க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மாத்தூர், இலுப்பூர் சாலையில் இருந்து 200 மீட்டர் தொலைவில் இந்த கிராமம் அமைந்துள்ளது. மாத்தூர், இலுப்பூர் சாலையிலிருந்து வடக்கு புதுப்பட்டி கிராமத்துக்கு செல்லும் சாலை 65 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த கருப்பன் வகையறாவுக்கு சொந்தமான இடத்தில் இருந்து வந்தது.
பின்னர் ஊர்மக்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் அந்த இடத்தை பொதுசாலையாக 1959ம் ஆண்டு கருப்பன் தரப்பினர் எழுதிக் கொடுத்தனர். இப்போது இந்த சாலை வருவாய்த்துறை கணக்கில் பொதுசாலையாக உள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் சார்பில் சிமெண்ட் மற்றும் தார் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் தங்களது இடத்தை கிராமத்துக்கு எழுதிக் கொடுக்க கருப்பன் இறந்துவிட்ட நிலையில் அவரது மகன் கோபால் 51 என்பவர் இந்த சாலை தனது தந்தை பெயரில் உள்ளதால் ஊர் மக்கள் யாரும் சாலையை பயன்படுத்தக் கூடாது என்று கூறி தடை ஏற்படுத்தி வந்தார்.
ஆனாலும் கிராம மக்கள் தடையை அகற்றிவிட்டு தங்களது வீடுகளுக்கு சாலை வழியாக சென்று வந்தனர். இந்நிலையில் கோபால அவரது நண்பர் நீர் பழனியை சேர்ந்த பிரபு 36 ஆகிய இருவரும் நேற்று முன்தினம் ஆவூரில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு சென்று விஏஓ பிரேமானந்தயிடம் வடக்கு புதுப்பட்டி கிராமத்துக்கு செல்லும் சாலையை பட்டா மாற்றி எழுதிக் கொடுக்குமாறு கேட்டனர். அந்த சாலை வருவாய்த்துறை வரைபட கணக்கில் பொது சாலையாக இருப்பதால் பட்டா மாறுதல் செய்ய முடியாது என்று விஏஓ தெரிவித்தார்.
ஆத்திரம் அடைந்த கோபால் பிரபு இருவரும் சேர்ந்து விஏஓ தகாத வார்த்தைகளால் திட்டி பணி செய்ய விடாமல் தடுத்தனர். இது குறித்து விஏஓ பிரேமானந்த் அளித்த புகாரின் பெயரில் மாத்தூர் போலீஸ் சார் வழக்குப்பதிந்து கோபால் பிரபு இருவரையும் கைது செய்தனர்.