வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று மாயமான கணவரை மீட்க வேண்டும் - புகார்

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று மாயமான கணவரை மீட்க வேண்டும் -  புகார்

சேலம் கலெக்டரிடம் பெண் புகார்.

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று மாயமான கணவரை மீட்க வேண்டும் என சேலம் கலெக்டரிடம் பெண் புகார்.
சேலம் சூரமங்கலம் முல்லைநகரை சேர்ந்தவர் நித்யாஸ்ரீ. இவர், நேற்று மாலை தனது உறவினர்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது, அவர் வெளிநாட்டில் வேலைக்கு சென்ற தனது கணவரை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தரக்கோரியும் அதிகாரிகளை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். இதுகுறித்து நித்யாஸ்ரீ கூறுகையில், எனக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் கார்த்திக் ரங்கநாதன் (வயது 31) என்பவர் விசா எடுத்து சவுதி அரேபியா ரியாத் எனும் நாட்டில் ஒரு நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றார். தினமும் செல்போனில் பேசிக்கொள்வோம். கடந்த 20-ந் தேதி இரவில் இருந்து எனது கணவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது நண்பரிடம் கேட்டபோது, அவர் வேலை முடித்து காரில் வெளியே சென்றவர் அதன்பிறகு தங்கியிருக்கும் அறைக்கு வரவில்லை என்று கூறினார். 3 நாட்கள் ஆகியும் அவருக்கு என்ன நடந்தது? என்று தெரியவில்லை. இதனால் நானும், எனது குழந்தைகளும் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எனவே, வெளிநாட்டில் சிக்கியுள்ள எனது கணவரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Tags

Next Story