பக்ரித் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் 1 கோடி வரை விற்பனை
திருப்புவனத்தில் பக்ரித் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுச்சந்தையில் ஆடுகள் 1 கோடி வரை விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மெயின் ரோடு பகுதியில் வாரம்தோறும் கால்நடை சந்தை நடைபெறும், காலை ஐந்து மணி முதல் 10 மணி வரை ஆடு, கோழி, வாத்து, வான் கோழி உள்ளிட்டவைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படும், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை மொத்தமாக வாங்கி செல்வார்கள், சிவகங்கை மாவட்டத்திலேயே திருப்புவனம் தாலுகாவில்தான் கால்நடைகள் அதிகளவு வளர்க்கப்படுகிறது.
மணல்மேடு, பெத்தானேந்தல் அல்லிநகரம், பழையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆடுகள் வளர்ப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது. விவசாயிகள் தங்களது ஆடுகளை வாரச்சந்தையில் விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருவாயில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம், தீபாவளி, ஆடி, சிவராத்திரி, ரம்ஜான்,பக்ரீத் உள்ளிட்ட விசேச நாட்களில் சந்தை களை கட்டும் என்பதால் பலரும் ஆடுகள் வாங்க சந்தையில் குவிந்திருந்தனர். இன்று அதிகாலை முதல் ஆடுகள் வரத்து அதிகளவு இருந்தது. காலை 8 மணி வரை 3ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. எடைக்கு ஏற்ப ஒரு ஆடு 15 முதல் 45 ஆயிரம் வரை ஆடு விற்பனையாகின.
திருமணம், காதணி விழாக்களில் அசைவ விருந்திற்கு ஆட்டுகிடா வைத்து பயன்படுத்துவார்கள் என்பதால் விலை அதிகரித்துள்ளது. இதே போல நாட்டு கோழிகளின் விலையும் உயர்ந்துள்ளது. நாட்டு கோழி கிலோ 200 ரூபாயில் இருந்து 600 ரூபாயாக உயர்ந்துள்ளது. கோழிகளின் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து ஆட்டு வியாபாரிகள் கூறுகையில், ஜூன்17 ம் தேதி பக்ரீத் பண்டிகை வருகிறது. இதனால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டு, விலை அதிகரித்தது. ஆடுகளும் அதிகளவில் விற்பனைக்கு வந்ததால், விற்பனை ரூபாய் ஒரு கோடிக்கு மேல் விற்பனை ஆகி உள்ளதாக கூறுகின்றனர்