அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்க மோதிரம்!
தங்க மோதிரம்
அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்க மோதிரம்.
புதுக்கோட்டைமாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள சுனையக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு சிங்கைவாழ் அம்மன் பாய்ஸ் என்ற அமைப்பின் சார்பில் தங்க மோதிரங்கள் பரிசாக அளிக்கப்பட்டன. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ந. நல்லையா தலைமை வகித்தார்.முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகள் அ. யோகேஸ்வரி (474 மதிப்பெண்கள்), சு. ரூபினா (468), க. சாதனா (446) ஆகியோருக்கு தங்க மோதிரங்கள் பரிசாக அணிவிக்கப்பட்டன. மொத்தம் சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் 9.74 கிராம் தங்க மோதிரங்கள் அணிவிக்கப்பட்டன. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மலர்விழி, உமாமகேஸ்வரி, ரவி ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் மாசிலாமணி வரவேற்றார். முடிவில் ஆங்கில ஆசிரியர் து. கிருஷ்ணசாமி நன்றி கூறினார். சுனையக்காட்டில் பிறந்து தற்போது சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் 30 பேர், சிங்கைவாழ் அம்மன் பாய்ஸ் என்ற பெயரில் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் தங்கள் கிராமத்திலுள்ள அரசுப் பள்ளியில் சிறப்பிடம் பெற்று வரும் மாணவர்களுக்கு தங்க மோதிரம் அணிவித்து ஊக்கப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story