தனியார் இடத்தில் அரசு கட்டடமா? நிகழ்ச்சியை ரத்து செய்த அமைச்சர்

புதுக்கோட்டையில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அமைச்சர் ரகுபதி அடிக்கல் நாட்ட இருந்த நிலையில்,அந்த இடம் தனிநபருக்கு சொந்தமானது என தெரிந்ததும் நிகழ்ச்சி ரத்தானது.

புதுக்கோட்டையில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அமைச்சர் ரகுபதி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்ட இருந்த நிலையில், சுகாதார நிலையம் அமைய இருந்த இடம் தனிநபருக்கு சொந்தமானது என வெளியான தகவலையொட்டி நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது... நகராட்சிக்கு சொந்தமான ரூ.2.5 கோடி மதிப்பிலான இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை கண்டித்து அப்பகுதி இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை 24 ஆவது வார்டு பகுதியான பெரியார் நகரில் இன்று மாலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க 2400 சதுர அடியில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அமைச்சர் ரகுபதி பங்கேற்று பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைய இருந்த இடம் தனிநபருக்கு சொந்தமானது எனவும் அந்த இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கூடாது எனவும் தனிநபர் ஒருவர் திடீர் புயலை கிளப்பி உள்ளார். இதனால் நடைபெற இருந்த அடிக்கல் நாட்டு விழா திடீரென ரத்து செய்யப்பட்டது. இதை எடுத்து அமைச்சர் நிகழ்ச்சியும் ரத்தானது. இதையறிந்த அப்பகுதி இளைஞர்கள், நகராட்சிக்கு சொந்தமான இடத்தை எப்படி தனி நபர் உரிமை கொண்டாட முடியும் எனக் கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அப்பகுதி இளைஞர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, நகராட்சி ஆணையர் சியாமளா ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இளைஞர்கள் நகராட்சிக்கு சொந்தமான இடம் எப்படி தனிநபருக்கு உரிமையானது. என கேள்வி எழுப்பினர். அப்போது நகராட்சி ஆணையர் தற்போது வரை நகராட்சிக்கு சொந்தமான இடமாகவே உள்ளது என்பதற்கான ஆவணத்தை காண்பித்து விளக்கினார்.

நகராட்சிக்கு சொந்தமான இடம் என ஆவணங்கள் இருந்த போதும் தனிநபர் தனக்கு சொந்தமான இடம் எனக் கூறியதால் நிகழ்ச்சியை ஏன் ரத்து செய்ய வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினர். உடனே அடிக்கல் நாட்ட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திய எம்எல்ஏ முத்துராஜா, இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கண்டு எந்த சிக்கலும் இல்லாமல் வேறு ஒரு நாளில் பிரமாண்டமாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து நடத்துவோம் என உறுதி அளித்தார்.

இதனால் இளைஞர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் பேசும்போது, ரூ.2.5 கோடி மதிப்புள்ள நிலத்தை, அபகரித்த இடத்தை உடனடியாக மீட்டு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் இன்னும் இரண்டு நாட்களில் பெரும் திரளான போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர்...

Tags

Next Story