தஞ்சையில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து ஊழியர் போராட்டம்
தஞ்சாவூரில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கூடுதல் நடை இயக்க வற்புறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சாவூர் கரந்தை பணிமனை முன் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சார்பில், தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு நாள்தோறும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கத்துக்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டுள்ளது.

இதனால் தஞ்சாவூரிலிருந்து செல்லக்கூடிய பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை சென்று பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் அங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வருகின்றன. கோயம்பேட்டை விட கிளாம்பாக்கம் ஏறத்தாழ 30 கி.மீ. தொலைவு குறைவாக உள்ளதால், இரு நடைகளைச் சேர்த்து 60 கி.மீ. குறைகிறது.

இந்த இடைவெளி கி.மீட்டரை நிறைவு செய்ய தஞ்சாவூருக்கு வரும் பேருந்துகளிலிருந்து பயணிகளை இறக்கிவிட்டு, அருகிலுள்ள ஊர்களுக்கு இயக்க வேண்டும் என அலுவலர்கள் கூறுகின்றனராம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரந்தை பணிமனை முன் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், ஏராளமான ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பினர்.

தகவலறிந்த கிளை மேலாளர் மற்றும் அலுவலர்கள் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உயர் அலுவலர்களிடம் பேசி தீர்வு காணலாம் என அலுவலர்கள் கூறியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

Tags

Next Story