வேலூர் அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு
கண்ணாடி உடைப்பு
தமிழகம் முழுவதும் 6-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து கூட்டமைப்பு தொழில் சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில், வேலூர் மாவட்டத்தில், 90 சதவீத அரசு பேருந்துகள் இயங்கி வருவதாக கூறப்படும் நிலையில், பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திப்ப சமுத்திரத்தில் இருந்து வேலூர் பழைய பேருந்து நிலையம் நோக்கி அரசு பேருந்து வந்துகொண்டிருந்தபோது கருகம்பத்தூர் அருகே அரசு பேருந்து மீது நபர் ஒருவர் கற்கள் எரிந்து கண்ணாடிகளை உடைத்துள்ளார்.
அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் வேலூர் கருகம்புத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பதும் அவரும் நடத்துனர் என்பது தெரியவந்தது. பஸ் கண்ணாடி உடைப்புக்கான காரணம் என்பதை தெரிந்து கொள்ள கார்த்திகேயனிடம் நடத்திய தொடர் விசாரணையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், தனியார் பேருந்து ஓட்டுநர்களையும் நடத்துனர்களையும் அழைத்து அரசு பேருந்துகளை இயக்கி வரும் நிலையில், தனக்கு அரசு பஸ் நத்துனர் பணி வழங்க வேண்டும் என வேலூர் கொணவட்டம் பேருந்து பணிமனையை அணுகியதாகவும் ஆனால் பணிமனையில் உள்ள அதிகாரிகள் வேலை தர முடியாது என்று தெரிவித்ததாகவும் இதனால் ஆத்திரத்தில் பேருந்து கண்ணாடியை உடைத்ததாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் கார்த்திகேயனை வேலூர் வடக்கு காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பஸ் கண்ணாடியை உடைத்தவர் மனநலம் பாதிக்கப்படுவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.