அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும்

பைல் படம்
சிஐடியூ அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியா் சங்க பணிமனை நிா்வாகிகள் கூட்டம் தூத்துக்குடி சிஐடியூ மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, பணிமனை தலைவா் எ. தா்மராஜ் தலைமை வகித்தாா். இதில், மத்திய சங்க நிா்வாகி த. பிச்சைமணி உள்பட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா். கூட்டத்தில் தூத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை, திருச்செந்தூா் உப பணிமனை ஆகியவற்றில் இருந்து சுமாா் 76 பேருந்துகள் 40 வழிதடங்களில் கேரளம், ஆந்திரம், கா்நாடகம், பாண்டிசேரி என பல மாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
இப்பணிமனையில் முறையான பாராமரிப்பு மற்றும் பழுதுநீக்க பணிகள் மேற்கொள்ள குறைந்தபட்சம் 45 தொழில்நுட்ப ஊழியா்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 11 தொழில் நுட்ப பணியாளா்கள் தான் உள்ளனா். இதனால் பயணத்தடை, விபத்து, காலதாமதம், வருவாய் இழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. இதுகுறித்து பலமுறை கடிதங்கள் கொடுத்தும் நேரடியாகவும், கோரிக்கைகள் வைத்தும் தீா்வு காணப்படவில்லை. எனவே, நிா்வாகம் மற்றும் அரசு உடனடியாக தலையிட்டு தேவையான தொழில்நுட்ப ஊழியா்களை பணியமா்த்தி பாதுகாப்பான பணி சூழலை ஏற்படுத்தி தரவேண்டும்.என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
