அச்சு முறிந்து நடுவழியில் நின்ற அரசு பேருந்துகள் - தவித்த பயணிகள்

தஞ்சாவூரில் இரண்டு அரசு நகரப் பேருந்துகளின் அச்சு முறிந்து நடுவழியில் நின்றதால் பயணிகள் அவதியடைந்தனர்.

தஞ்சாவூர், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து டிஎன்.68.என்.0427 என்ற நகரப் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பாபநாசம் நோக்கி சென்றது. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கரந்தை பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, அச்சு முறிந்து பேருந்து நகர முடியாமல் நடுவழியே நின்றது. இதனால், பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர்.

மேலும், காலை நேரம் என்பதால், வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். சிலர் மாற்றுப் பேருந்தில் ஏறிச் சென்றனர். இதேபோல, டிஎன்.68.என் 522 என்ற நகரப்பேருந்து ரயில்வே நிலையத்தில் இருந்து, பழைய பேருந்து நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு காந்திஜி சாலை வழியாக சென்ற போது, திடீரென பேருந்தின் அச்சு முறிந்து செயல்பாடு இன்றி நடுவழியில் நின்றது. இதனால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். இதன் பிறகு மெக்கானிக் வரவழைக்கப்பட்டு சரி செய்யப்பட்டு நகரப் பேருந்துகள் கொண்டு செல்லப்பட்டது.

தஞ்சாவூரில் இயங்கும் அரசு நகரப் பேருந்துகள் எல்லாம் பழுதடைந்த வண்டியாக தான் உள்ளது. அரசுப் போக்குவரத்து துறை மீது தனிக்கவனம் செலுத்தி, பழுதடைந்த வண்டிகளை மாற்றி, பெரியளவில் விபத்துக்கள் ஏற்படாத வகையில் தடுக்க வேண்டும்" என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story