திருக்காட்டுப்பள்ளி வழித்தடத்தில் அரசு நகரப் பேருந்து இயக்கம்

திருக்காட்டுப்பள்ளி வழித்தடத்தில் அரசு நகரப் பேருந்து இயக்கம்
சாலை மறியல்
திருக்காட்டுப்பள்ளி வழித்தடத்தில் அரசு நகரப் பேருந்து இயக்கப்படுகிறது.

திருச்சி மாவட்டம், திருவரம்பூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு வரும், எண்.87 - நகரப் பேருந்து ஒரத்தூர் - ஆற்காடு - முல்லைக்குடி வழியாக திருக்காட்டுப்பள்ளி சென்றடையும் வகையில் இயக்கப்பட்டு வந்தது. இதனால், இப்பகுதி பொதுமக்கள் பயனடைந்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக இந்த வழித்தடத்தில் பேருந்து இயக்கப்படவில்லை. தற்போது அந்த பேருந்து விண்ணமங்கலம், பூதராயநல்லூர் வழியாக திருவரம்பூர் செல்கிறது. இந்தப் பேருந்து, ஆற்காடு முல்லைக்குடி வழியாக இயக்கப்படாததால் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் தடம் எண் 87 அரசுப் பேருந்தை மீண்டும் ஏற்கனவே சென்ற வழியாக இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி, முல்லைக்குடி, ஆற்காடு கிராம பொதுமக்கள், இளைஞர்கள், எண்-87 நகரப்பேருந்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டக் குழு உறுப்பினர் கே. காந்தி தலைமையில், திருக்காட்டுப்பள்ளியில் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து பூதலூர் வட்டாட்சியர் மரிய ஜோசப், காவல்துறை ஆய்வாளர் ஜெயகுமார் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதால் மீண்டும், முல்லைக்குடி, ஆற்காடு வழியாக பேருந்து இயக்கப்பட்டது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்தப் போராட்டத்தில், சிபிஎம் கிளைச் செயலாளர் பழனி, சிபிஎம் உறுப்பினர் அந்தோணி சாமி, விவசாய தொழிலாளர் சங்கம் ராஜேந்திரன், மதிமுக முருகானந்தம், அதிமுக திருமேனிநாதன், மணியரசன் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story