உலக தண்ணீர் தினத்தில் நீரை வீணாக்கும் அரசு மருத்துவமனை
உலக தண்ணீர் தினமான நேற்று, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், டேங்கில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக குடிநீர் வழிந்து வீணாகியது.
ஏரிகள் நிறைந்த மாவட்டம் என பெயர் பெற்ற காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீரின் அருமை கருதி அனைத்து தரப்பு மக்களும் நீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு அடைந்து மற்றவர்களுக்கும் ஏற்படுத்தி வருகின்றனர். நீரின்றி அமையாது உலகு என கூறும் பழமொழிக்கு ஏற்ப நீரின் அவசியம் கோடை கலத்தில் மிக முக்கியம் என்பது குடியிருப்பு வாசிகள் அறிந்த உண்மை. முறையாக குடிநீர் விநியோகிக்கவில்லை எனக் கூறி சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு அரசு அதிகாரிகளை பாடாய் படுத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு அறவே இருக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அரசு அலுவலர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சுற்றிக்கை அனுப்பி அதற்கான நடவடிக்கையும் எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
ஆனால் நேற்று உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு அருகே நீர் தொட்டி வழிந்து குடிநீர் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வீணாக சென்று கொண்டிருந்தது. இதனால் அவ்வழியே வந்த நோயாளிகள் கூட சுற்றி செல்லும் நிலையும் ஏற்பட்டது. இதற்காக நியமிக்கப்பட்ட ஊழியர் அப்பகுதியில் இல்லை என்பதும் , பல நூறு மீட்டர் நீர் வீணாக செல்கிறது என பலர் இது குறித்து கவலைப்பட்டு சென்றனர். அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் , அவருடன் தங்கி இருக்கும் உறவினர்களுக்கு நீர் எவ்வளவு அவசியம் என்பது தெரிந்திருந்த நிலையிலும் , ஊழியர்கள் அலட்சியமாகவே செயல்பட்டு நீர் தொடர்ந்து வெளியேறி வந்தது.
இந்நிலை எப்போதும் தொடர்ந்து காணப்படும் என அப்பகுதியில் சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் தெரிவித்தார். ஏற்கனவே பாலாறு உள்ளிட்ட நீர் நிலைகள் நீரின்றி வறண்டு காணப்படும் நிலையில் இது போன்ற நிலையை அரசு ஊழியர்கள் கவனமாக செயல்பட்டு குடிநீர் சேவையை பூர்த்தி செய்ய வேண்டும் தவிர வீணாக்க கூடாது என்பதே அனைவரின் கோரிக்கை.