தஞ்சையில் அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்த அரசு தலைமைக் கொறடா
தஞ்சாவூரில் அரசு சார்பில் புகைப்படக் கண்காட்சி
தஞ்சாவூர் அருங்காட்சியக வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில், அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் சனிக்கிழமை மாலை தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் அருங்காட்சியக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், தொடங்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சி வரும் மார்ச்.15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளின் சாதனைகளை விளக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் நலனை மனதில் கொண்டு நீங்கள்நலமா?, உங்களைத்தேடி உங்கள் ஊரில், மக்களுடன் முதல்வர், நான் முதல்வன், காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமைப்பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, உங்கள் தொகுதியில் முதலமைச்சர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்தை உறுதி செய், மக்களைத் தேடி மருத்துவம் போன்ற அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளின் சிறப்பு அம்சங்கள், திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் பரதநாட்டியம், கும்மி நடனம், கரகாட்டம், நடனம், ஒயிலாட்டம், கிராமிய நடனம், செவ்வியல் நடனம், கிராமிய நடனம், நாட்டுப்புற நடனம், நாட்டுப்புறபாடல், வயலின் கச்சேரி, கீ-போர்டு கச்சேரி போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தினந்தோறும் மாலை 5 மணி முதல் நடைபெறுகிறது. மேலும், பல்துறை அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், 7டி திரையரங்கம், ராஜாளி பறவைகள் பூங்கா, சோழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் மற்றும் கைவினைப் பொருட்கள், இசை நீரூற்று, சிறுவர்கள் புகைவண்டி, தஞ்சாவூர் புவிசார் குறியீடு பொருட்கள் ஆகியவை அமைந்துள்ளன. இந்நிகழ்ச்சியில், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் அவர்கள், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செ.கார்த்திக்ராஜ், வட்டாட்சியர் ப.அருள்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story