அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை - இணை இயக்குநர் விழிப்புணர்வு
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வி.நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இந்த ஆண்டிற்கான முதலாவது வகுப்பு மாணவர் சேர்க்கையானது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் ராஜேந்திரன் புதிதாக முதலாம் வகுப்பு இணைந்த மாணவ மாணவிகளை வீடு வீடாக சென்று மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்பு அளித்து பள்ளிக்கு அழைத்து வந்தார்.
நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசியபோது, அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு 14 முக்கிய சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவிகளுக்கு உயர்கல்வி கற்பதற்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மாணவர்களுக்கும் இந்த தொகை வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதேபோல் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 7.5% மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு தரப்படுவது மிக சிறப்பான ஒன்று . எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார் .
பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று இந்த ஆண்டிற்கான முதல் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மாலை அணிவித்து பள்ளிக்கு அழைத்து வந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் ராசிபுரம் நகர மன்ற தலைவர் கவிதா சங்கர், பள்ளி தலைமை ஆசிரியர் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்து தெரிவித்தனர்.