புத்தகம் வழங்க கோரி அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே துளுவபுஷ்பகிரி கிராமத்தில் அரசு நிதி உதவி தொடக்க பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையில் சுமார் 45 மாணவ மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் இந்த பள்ளியில் அனைத்து வகுப்பிற்கு சேர்த்து மீனா என்ற ஆசிரியை பொறுப்பு ஆசிரியையாக பணியாற்றி வருகின்றார். கடந்த 2023ம் கல்வி ஆண்டில் ஆங்கில வழி கல்வி மூலம் வகுப்புகள் நடத்தபட உள்ளதாக கூறி பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவ சேர்க்கை நடைபெற்று கடந்த 6 மாத காலமாக வகுப்புகள் நடைபெற்று வந்தன. மேலும் தற்போது 2ம் பருவ தேர்வு நெருங்கி வரும் நிலையில் ஆங்கில வழி புத்தகம் மாணவர்களுக்கு வழங்கபடவில்லை. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டதற்கு ஆங்கில வழி புத்தகம் வழங்கவில்லை என்று கூறியதாக கூறப்படுகின்றது. இதனை அடுத்து ஆங்கில வழி கல்வி புத்தகம் வழங்கும் வரையில் தமிழ் வழி கல்வி பாடத்தை படிக்க மாணவர்களைஅறிவுறுத்தியதால் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து விட்டு பெற்றோர்களுடன் ஒன்றுணைந்து பள்ளி வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆங்கில வழி கல்வி புத்தகம் விரைவாக வழங்க வேண்டும். கூடுதல் ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும், அரசு நிதி உதவி பள்ளியை அரசு பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர். பின்னர் மாணவர்களை பெற்றோர்கள் தங்களது வீட்டிற்கு அழைத்து சென்றனர். ஆங்கில வழிகல்வி பாடபுத்தகம் வழங்காதததை கண்டித்து மாணவர்கள் வகுப்பறை புறக்கணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.