அரசுப் பள்ளி சீருடை தயாரிப்பு தொழிலாளா்கள் போராட்டம்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சீருடை தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதைக் கண்டித்து தையல் தொழிலாளர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டனர்.
அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சீருடைகள் தயாரித்து வழங்கும் பணியில் திருச்சி மாவட்ட 3 கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள 2,500-க்கும் மேற்பட்ட பெண் தையல் தொழிலாளா்கள் ஈடுபடுகின்றனா்.
இந்நிலையில் இந்தாண்டு சீருடை தயாரிக்கும் பணியை தனியாா் நிறுவனங்களுக்கு வழங்குவதைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பெண் தையல் தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். இதையடுத்து சமூக நலத்துறை அலுவலா்கள், கூட்டுறவு அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். தங்களது கோரிக்கைகள் மீது அரசின் கவனத்தை ஈா்க்கவே போராட்டம் நடத்துவதாக கூறியும் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் ஜூன் 4 வரை அனுமதி வழங்க முடியாது என காவல்துறையினா் தெரிவித்தனா்.
இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். இருப்பினும், தங்களுக்கு சீருடைகள் வழங்காமல், தனியாருக்கு வழங்கினால் வீதிக்கு வந்து போராடுவோம் என அவா்கள் தெரிவித்தனா்