அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் தர்ணா
தர்ணா
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் 65 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சுமார் 250 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த பணிமனையில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி ,மதுரை, திருச்சி, திண்டுக்கல் , கோவை, ராஜபாளையம் சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் கோவில்பட்டியை சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கும் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை நிர்வாக இயக்குனர்,கிளை மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அரசு பஸ்களை இயக்கும் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பணியாளர்களை தரக்குறைவாக பேசுவதாகவும், கூடுதல் பணி நேரம் வழங்கி கட்டாயப்படுத்துவதாகவும், துக்க நிகழ்வு, உடல் நலக்குறைவு, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மற்றும் அவசர காலத்திற்கு ஊழியர்கள் விடுமுறை கேட்டால் அளிக்க மறுப்பதாகவும், மேலும் பணிமனையில் ஊழியர்களுக்கு குடிக்க தண்ணீர் கூட வைக்கவில்லை, அதிகாலை பணிக்காக தங்கியிருக்கும் ஊழியர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என்றும், இதுகுறித்து கேட்டால் ஊழியர்களை மிரட்டுவது மட்டுமின்றி, வேறு பயணிக்கு இடமாற்றம் செய்யும் நிலை இருப்பதாகவும் கூறி பணிமனை முன்பு ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கிளை மேலாளர் சண்முகம் மற்றும் டிவிஷனல் மேனேஜர் (கிழக்கு) கண்ணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் இதில் உடன்பாடு ஏற்பட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.