நல்லதை செய்ய ஆளுநர் தடையாக இருக்கிறார் - திருச்சி சிவா
பிரசார பொதுக்கூட்டம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து திமுக பொதுச்செயலாளர் திருச்சி சிவா பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அண்ணனாய், தம்பியாய் வாழுகின்ற மதசார்பற்ற நாடாக இந்தியா இருக்குமா? அல்லது ஒற்றை மதம் எல்லோரையும் ஆக்கிரமிக்கும் நிலை வருமா? ஹிந்தி என்ற ஒற்றை மொழி ஆதிக்கம் செலுத்துமா? என்பதை தீர்மானிக்கின்ற தேர்தல் இது! என்றார்.
GST வரி என்பது ஏழை பணக்காரர்களுக்கும் ஒரே மாதிரியான வரி என்பார்கள். ரூ14 லட்சம் கோடி வரி வருவாயில், ரூ44 ஆயிரம் தான் பணக்காரர்கள் தந்தது. அதில் பெரும் பணக்காரர்கள் கடனாக பெற்றுக்கொண்ட ரூ10 ஆயிரம் கோடியையும் மோடி அரசு தள்ளுபடி செய்து அவர்களை பாதுகாக்கிறது. ஆனால் கல்விக்கடனையும், விவசாய கடனையும் தள்ளுபடி செய்யவில்லை. இந்தியாவில் 22 கோடி பேர் இரவில் பட்டினியுடன் படுக்க செல்கின்றனர்.
கடந்த ஓராண்டில் மட்டும் 11,502 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். எனவே இந்த தேர்தலில் நாம் ஏமாந்து போனால் இனி மீட்பதற்கு வழியே இல்லை. நல்ல திட்டங்களை செயல்படுத்த மாநில அரசுக்கு ஆளுநர் தடையாக இருக்கிறார். புயல் மழை வெள்ளத்திற்கு மத்திய அரசு நிதி தருவதில்லை. அன்று வராத பிரதமர், நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர் இன்று ஓட்டுக்காக அடிக்கடி தமிழகம் வருகின்றனர். மக்களே நீங்கள் நீதிபதியாக இருந்து நாடு நலமாக இருக்க, வாக்குச்சீட்டினை கொண்டு ஆட்சி மாற்றத்தை கொண்டு வாருங்கள் என திருச்சி சிவா கேட்டுக்கொண்டார்.