ஆளுநரின் முடிவுகள் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது

ஆளுநரின் முடிவுகள் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது

தமிழக வாழ்வுரிமைக் கட்சி கூட்டம் 

ஆளுநர் தான்தோன்றி தனமாக எடுக்கும் பல முடிவுகள் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் தி வேல்முருகன் எம் எல் ஏ கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னாள் அமைச்சர் பொன்முடி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பது குறித்த கேள்விக்கு, பதில் அளித்த அவர், எல்லா அதிகார மையங்களை காட்டிலும் உச்சபட்ச அதிகாரம் கொண்டது உச்ச நீதிமன்றம். எனவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருக்கிறதோ அதற்கு ஜனாதிபதி முதல் கடை கோடி குடிமகன் வரை கட்டுப்பட்டு ஆக வேண்டும். ஒருவேளை மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருந்தால் ஆளுநர் சொல்லும் கருத்து சரியானது.

ஆனால் உச்ச நீதிமன்றம் அந்தத் தீர்ப்பையே நிறுத்தி வைத்து இருக்கும் பொழுது தீர்ப்பு விவரங்களில் இதர பக்கங்களில் என்ன வழங்கப்பட்டிருக்கிறதோ அதை புரிந்து கொண்டு ஆளுநர், தனக்கு வழங்கப்பட்டுள்ள இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி தான் நடந்து கொள்ள வேண்டுமே தவிர தான்தோன்றித்தனமாக ஆளுநர் எடுக்கும் பல முடிவுகள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக இருக்கிறது என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

காவிரி ஆற்றின் குறித்து கர்நாடகா அரசு மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, பதில் அளித்த அவர்,இந்த விவகாரத்தில் காவேரி மேலாண்மை வாரியம் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்ளுகிறது. ஒழுங்காற்று குழு மற்றும் மேலாண்மை வாரிய குழு கூட்டம் நடைபெறும் பொழுது அதில் மேகதாதில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என உறுதி அளித்தனர். அதேபோல சட்டமன்ற குழு கட்சி குழு உறுப்பினர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட பொழுதும் நீர் பாசன துறை அதிகாரிகள் அங்கு அணை கட்டப்படாது என உறுதி அளித்தனர். இந்த நிலையில் இந்த உறுதிகள் அனைத்தையும் அவர்கள் காட்டில் பறக்கவிட்டு கர்நாடக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர், இனக் கலவரங்களை தூண்டுவது போல், மிகவும் மோசமான வார்த்தைகளில் பேசி வருகிறார்கள்.

தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட நாங்கள் தரமாட்டோம் என்று அறிவிக்கிறார்கள். இது இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்புடைய செயல் அல்ல. காவேரி ஆறு என்பது கர்நாடகா தமிழ்நாடு கேரளா பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் உரிமைகள் தொடர்புடையது. நதிநீர் பங்கிட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் காவிரி உரிமைகளை கோரி வருகிறோம். ஏற்கனவே பல தடுப்பணைகளை கட்டி தண்ணீரை தேக்கி வைத்துள்ள கர்நாடக அரசு, தற்பொழுது 215 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான அனைத்து பூர்வாங்க பணிகளை மேற்கொண்டு வருவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்ற மத்திய பாரதிய ஜனதா அரசையும் வன்மையாக கண்டிக்கிறேன்.

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு சாதகமாக நடந்து கொள்வதை வன்மையாக கண்டிக்கிறேன். எனவே இந்தியாவிலேயே மிகச்சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் இந்த விவகாரத்தில், சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, கர்நாடக அரசின் அணைக்கட்டும் முயற்சி தடுத்து நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாகவும் தவறினால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தேர்தல் பாதையில் இருந்து விலகி இந்த தேர்தலில் கர்நாடக மாநில அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என எச்சரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags

Next Story