தேசிய அளவில் அசத்திய அரசு பள்ளி மாணவர்கள் - உற்சாக வரவேற்பளித்த மக்கள்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரியலூர் மாவட்ட கிக் பாக்ஸிங் சார்பில் மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. கடந்த மாதம் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சுபாஷினி, எழில், அக்ஷயா, நந்தினி, தினேஷ், நவீன்குமார், பாத்திமா, ஆதிரசஹானா, முகுந்தன் ஆகிய 9 மாணவர்களும் வெற்றி பெற்று மேற்குவங்க மாநிலம் சிலிகுரி நகரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர்.
பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற கிக் பாக்ஸிங் போட்டிகளில் சுபாஷினி, எழில், ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்றனர். அதுபோல் அக்ஷயா, நந்தினி, தினேஷ், நவீன் குமார் ஆகியோர் வெவ்வேறு பிரிவுகளில் தங்கப்பதக்கங்கள் வென்றனர். மாணவர்கள் ஆதிரசஹானா, முகுந்தன் ஆகியோர் வெவ்வேறு பிரிவுகளில் வெண்கல பதக்கங்கள் வென்றனர். வெற்றி பதக்கங்களோடு ஊர் திரும்பிய மாணவர்களுக்கு, ஆண்டிமடம் பேருந்து நிலையத்தில் ஊர் மக்கள், பெற்றோர்கள் மற்றும் ஆண்டிமடம் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரசு பேருந்து நிலையத்திலிருந்து ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி வரை மாணவ, மாணவிகளின் பலத்த கரகோஷங்கள் இடையில் வெற்றி பெற்ற அனைத்து வீரர், வீராங்கனைகளும் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் வெற்றி பெற்ற அனைவரையும் வாழ்த்தி உரையாற்றினர். வெற்றி பதக்கங்களைப் பெற்ற ஒன்பது மாணவர்களில் நான்கு மாணவர்கள் அரசு பள்ளியிலும், ஐந்து மாணவர்கள் தனியார் பள்ளியிலும் கல்வி கற்று வருகின்றனர்.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தேசிய அளவில் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ள நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் ரீடு தொண்டு நிறுவனம் ரீடு செல்வம், பீனிக்ஸ் மகளிர் அறக்கட்டளை சார்பில் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜ், சந்திரா, பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு சால்வி அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்