ஆசிரியர்களே இல்லாத அரசு பள்ளி - பெற்றோர்கள் அதிர்ச்சி!
அரசு பள்ளி
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள காசிம்புதுப்பேட்டை அரசுப்பள்ளியில் பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களும் பணிமாறுதலில் சென்றுவிட்டதால், மாணவர்கள், பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கீரமங்கலம் அருகேயுள்ள காசிம்புதுப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் 111 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 7 ஆசிரியர்கள் பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஆண்டு 2 ஆசிரியர்கள் பணிமாறுதலில் சென்றுவிட்டனர். மேலும் ஒரு ஆசிரியர் மாற்றுப்பணியில் வேறு பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டாராம்.
இதனால், பள்ளி மேலாண்மைக்குழுவால் 2 தற்காலிக பெண் ஆசிரியைகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியர்களும் கடந்த வாரம் நடைபெற்ற கலந்தாய்வில் பணிமாறுதல் பெற்று சென்றுவிட்டதால், அப்பள்ளி ஆசிரியர்களே இல்லாத பள்ளியாக சனிக்கிழமை மாறியது.
திங்கள்கிழமை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் யாரும் வராததால் பள்ளி மேலாண்மைக்குழுவால் நியமிக்கப்பட்ட ஆசிரியைகள் மட்டும் பள்ளியில் இருந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து பெற்றோர்களும் பள்ளியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக பள்ளிக்கு போதிய ஆசிரியர்களை நியமிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, பணிமாறுதலில் சென்ற 2 ஆசிரியர்களை தற்காலிகமாக பள்ளியில் பணிபுரிய கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் மேலும் கூறியது:அப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நீண்ட காலமாக அப்பள்ளியில் பணியாற்றி வந்தனர். இருப்பினும் உள்ளூர் மக்களின் போதிய ஒத்துழைப்பு இல்லாததால், அவர்கள் பணிமாறுதல் பெற்றுச்சென்றுள்ளனர்.
மாவட்டம் விட்டு மாவட்டம் மாறும் கலந்தாய்வின்போது,இப்பள்ளிக்குப் போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். அதுவரை பணிமாறுதலில் சென்ற 2 ஆசிரியர்கள் பள்ளியில் தற்காலிகமாக பணியாற்றுவார்கள் என்றனர்.