மூன்றாம் பாலினத்தவரின் உயர்கல்வி கட்டண செலவுகளை அரசே ஏற்கும்!
திருப்பூரில் உயர் கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தவரின் கல்வி கட்டண செலவுகளை அரசு ஏற்கும் என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர், உயர்கல்வி பயிலும் திருநங்கைகளுக்கு கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது உயர் கல்வி பயிலும் திருநங்கைகள், திருநம்பியர் ஆகியோருக்கு கல்வி மற்றும் இதரக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும். தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை வைத்திருக்கும் அனைத்து திருநங்கைகள், திருநம்பியர், வருமான உச்சவரம்பு ஏதுமின்றி, பிற உதவித் தொகை ஏதேனும் பெற்று வந்தாலும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
பிற துறைகளின் மூலம் கல்வி உதவித் தொகை பெற்றிருப்பின் அத்தொகையை விடுத்து மீதமுள்ள தொகையினை இத்திட்டத்தின் கீழ் பெறலாம். 2024-2025ம் நிதியாண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படும். அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீதம் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசால் பயனாளிகளுக்கு வழங்கப்படும் கட்டணப் பயன்கள் அனைத்தும் முதற்கட்டமாக பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு பயிலும் அனைத்து திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும். எனவே, திருப்பூர் மாவட்டத்தில் உள்ளஉயர்கல்வி பயில விரும்பும் திருநங்கைகள், திருநம்பியர்கள் உரிய ஆவணங்களுடன் தயார் செய்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், மாவட்ட சமூகநல அலுவலகம், அறை எண்.36-ல் முன்மொழிவை சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.