அரசினர் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
மாணவருக்கு பட்டம் வழங்கல்
தருமபுரி அரசினர் பொறியியல் கல்லூரியில், 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் உயர்கல்வி படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா, கல்லூரி அப்துல் கலாம் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் முனைவர் வே. சுமதி அவர்கள் தலைமை தாங்கினார்.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சேலம் ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலான் இயக்குநர் இரா. சுந்தரம் கலந்துகொண்டு விழா சிறப்புரை நிகழ்த்தி, 345 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பட்டமளிப்பு விழா சிறப்புரையாற்றிய ஏரோஸ்பேஸ்,நிறுவன இயக்குநர், . இரா. சுந்தரம் அவர்கள் ஒவ்வொரு பொறியியல் துறையிலும் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றியும், மாணவர்கள் தங்களது தனித்திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும்,
புதுமைகள் புகுத்திடவும், தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது பற்றியும், தொழில் முனைவோராக உருவாவது பற்றியும் எடுத்துக் கூறினார். இக்கல்லூரியின் வளர்ச்சி பற்றி பெருமிதம் கொண்டார். முன்னதாக, இவ்விழாவினை தொடங்கி வைத்து ஆண்டறிக்கை வாசித்த முதல்வர்; வே. சுமதி அவர்கள், தனது உரையில் கல்லூரியின் சாதனைகளாக 2021-22 கல்வி ஆண்டிற்கான மாணவர்
தேர்ச்சியில் மாநில அளவில் 11 வது இடத்தைப் பிடித்தது என்றும், இக்கல்லூரியில் இருந்து 161 மாணவர்கள் சாம்சங், டாடா கன்சல்டன்சி, இன்போசிஸ் போன்ற முதன்மை நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள் என்றும், கல்லூரியின் துறை ஆய்வகங்களின் உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்பட்டது குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தேர்வுக்கான இலவச பயிற்சி, பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஜப்பான் மொழிப்பயிற்சி, நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக 821 மாணவர்கள் திறன்மேம்பாட்டு பயிற்சி பெற்று வருகிறார்கள் என்றும், 61 மாணவர்கள் புதுமைப்பெண் திட்டம் கீழ் பயன்பெறுகிறார்கள் என்றும்,
19 மாணவிகளுக்கு 'பிரகதி ஸ்காலர்சிப்' கிடைக்கப்பெற்றது என்றும், விளையாட்டுத் துறையில் மகளிர் வாலிபால் அணி முதல்வர் கோப்பை வென்றது என்றும், தமிழக அரசால் தற்பொழுது 9 கோடி மதிப்பில் உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு வருகிறது என்றும் கல்லூரியின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து, பட்டமளிப்பு விழாவில், அமைப்பியல் துறையில் இருந்து 67 மாணவர்கள், இயந்திரவியல் துறையில் 60, மின்னியல் துறையில் 71,
மின்னணுவியல் துறையில் 56, கணினி அறிவியல் துறையில் 91 என மொத்தம் 345 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.