அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா !
பட்டமளிப்பு விழா
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பிரிவில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, சுற்றுலா மேலாண்மை, வணிகவியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன.
இங்கு சுமார் 4,000 மாணவர்கள் படித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் மட்டும் இல்லாமல் சமவெளி பகுதிகளான கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரியில் 2021-22-ம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
விலங்கியல் துறை இணை பேராசிரியர் சனில் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ராமலட்சுமி தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
முதல்வர் ராமலட்சுமி பேசுகையில், "தற்போது வேகமாக இயங்கும் உலகில் பல்வேறு சவால்கள் உள்ளன. இதனை சந்திக்க கல்வி முக்கியமானது.
உலகில் நாம் அதிக இளைஞர்கள் கொண்ட நாடாக உள்ளோம். வாழ்க்கையில் வெற்றி பெற போட்டி போட்டு சாதிக்க கல்வி ஒன்றே முக்கியம்.
தற்போது இளங்கலை முடித்து பட்டம் பெற்றும் நீங்கள், வாழ்வை மாற்ற கூடிய முக்கியமான முடிவை எடுக்க கூடிய இடத்தில் உள்ளீர்கள்.
சரியான படிப்பை தேர்வு செய்து பயின்று நல்ல நிலைக்கு வர வேண்டும். நன்றாக படித்து சமுதாயத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் நீங்கள் முன்னேற வேண்டும்,"என்றார்.
விழாவில் 18 பாடப் பிாிவுகளை சேர்ந்த 773 இளநிலை, 178 முதுநிலை மாணவர்கள் என மொத்தம் 952 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.