"அரசு பள்ளி மீது அபார நம்பிக்கை - 2 பிள்ளைகளை சேர்த்தார் கோட்டாட்சியர்"
அரசு பள்ளியில் சேர்த்த கோட்டாட்சியர்
அரசு பள்ளியில் கோட்டாட்சியரின் பிள்ளைகள் சேர்க்கப்பட்டதை, பெற்றோர் மற்றும் அரசு அதிகாரிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்
காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியராக கலைவாணி என்பவர் சமீபத்தில் பொறுப்பேற்று கொண்டார். காஞ்சிபுரம் மாநகராட்சி தும்பவனம் தொடக்கப் பள்ளியில், தன் இரு பிள்ளைகளையும் சேர்க்க முடிவு செய்தார். அதன்படி, தன் இரு பிள்ளைகளுடன், பள்ளிக்கு வந்த கோட்டாட்சியர் கலைவாணி, மகள் பிராத்தனாவை மூன்றாம் வகுப்பிலும், மகன் சாய்பிரணவ் முதல் வகுப்பிலும் சேர்க்க, தலைமையாசிரியர் மலர்கொடியிடம் விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து வழங்கினார். பள்ளியில் சேர்க்கப்பட்ட கோட்டாட்சியரின் பிள்ளைகள், காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளியில் உணவு அருந்தினர். இதைத் தொடர்ந்து, இறை வணக்க கூட்டத்தில் பங்கேற்ற பின் வகுப்பறைக்கு சென்றனர். இறை வணக்க கூட்டத்தில் கோட்டாட்சியர் கலைவாணி பேசுகையில், 'அரசு பள்ளியில் தான் நானும் படித்தேன். அதன் காரணமாகவே, தற்போது அரசு அதிகாரியாக பொறுப்பேற்று உள்ளேன். 'மேலும், தாய்க்கு அடுத்தபடியாக ஆசிரியர்கள் உள்ளதால், அவர்கள் சொல்படி கேட்க வேண்டும்' என்றார். காஞ்சிபுரத்தில் ஏராளமான தனியார் பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், அரசு பள்ளியில் கோட்டாட்சியரின் பிள்ளைகள் சேர்க்கப்பட்டதை, பெற்றோர் மற்றும் அரசு அதிகாரிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
Next Story