நாகை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்
குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதன்மை கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானிடாம் வர்கீஸ், தலைமையில் நடைபெற்றது.
விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் நாகை மாவட்ட ஆட்சி தலைவர் ஜானி டாம் வர்கீஸ் பேசுகையில் பிரதம மந்திரியின் விவசாயி கௌரவ நிதி திட்டம் (PM-KISAN): பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித்திட்டத்தின்கீழ் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணையாக தலா ரூ.2000/- வீதம் ஆண்டிற்கு ரூ.6000/- வழங்கப்பட்டு வருகிறது.
அடுத்தடுத்த தவணைத் தொகைகளை தொடர்ந்து பெறுவதற்கு வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காத பயனாளிகள் தங்களுக்கு அருகிலுள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் (India Post Payment Bank IPPB) சேமிப்பு கணக்கு துவங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதுவரை இத்திட்டத்தில் பயன்பெறாத 31.01.2019க்கு முன் தனது பெயரில் சொந்த நிலம் உடைய தகுதியான விவசாயிகள் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் தங்களது ஆதார் மற்றும் நில விவரங்களை கொண்டு பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு முழுமையான விவரங்களை பதிவேற்றம் செய்யாதவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
அவ்வாறு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் PMKISAN வலைதளத்தில் "Updation of Self Registered Farmers" என்ற முகப்பில் சென்று பொது சேவை மையங்கள் மூலம் விடுபட்ட விவரங்களை முழுமையாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
ஏற்கனவே பயனாளியாக இருந்து தவணை தொகை கிடைக்கப்பெறாதவர்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் பணிபுரியும் வேளாண்மை விரிவாக்க பணியாளர்களை அணுகி குறைகள் இருப்பின் நிவர்த்தி செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இதுவரை e-KYC செய்யாத பயனாளிகள் தங்களுக்கு அருகாமையில் உள்ள இ-சேவை மையங்கள் அல்லது வேளாண் விரிவாக்க மையத்திலுள்ள விரிவாக்க பணியாளர்களை தொடர்பு கொண்டு முகபாவனை பதிவு (Facial recognition) மூலம் e-KYC செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் (MKMKS) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மண் வளத்தை பேணிகாக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளையும் ஊக்கப்படுத்திட இத்திட்டத்தினை தமிழ்நாடு முழுவதும் 2024-25ஆம் ஆண்டில் 22 இனங்களுடன் ரூ.206/- கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டக்கூறுகள் பின்வருமாறு: 50 சதவிகித மானியத்தில் பசுந்தாள் உர விதைகள் விநியோகம், மண்புழு உர தயாரிப்பு மையம் அமைத்தல், நெல் ஜெயராமன் அவர்களின் மரபுசார் நெல் இரகங்களை பாதுகாத்தல், மண்வள அட்டை வழங்குதல், களர், அமில நிலங்களை சீரபடுத்தி பயிர்களின் உற்பத்தியை பெருக்குதல், வேளாண் பயிர்களுக்கு திரவ உயிர் உரம் வழங்குதல், வயல் சூழல் ஆய்வு மேற்கொண்டு இரசாயன மருந்துகளின் பயன்பாட்டை குறைத்தல், வேளாண் காடுகள் திட்டத்தின் மூலம் வேப்பமரக்கன்றுகள் வழங்குதல்,
இயற்கை பூச்சி விரட்டிகளான ஆடாதோடா மற்றும் நொச்சி சாகுபடி ஊக்குவித்தல், மரபுசார் நெல் இரகமான சீவன் சம்பா சாகுபடியினை ஊக்குவித்தல், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகளின் பாரம்பரிய இரகங்களை பாதுகாத்தல். உயிர்ம வேளாண்மைக்கான மாதிரி பண்ணைத் திடல் அமைத்தல், உயிர்ம வேளாண்மையை ஊக்குவித்தல், இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு மையம் அமைத்தல், வேளாண் காடுகள் திட்டம், ஒருங்கிணைந்த பண்ணையம், மானாவாரி சாகுபடித் திட்டம், ஊட்டச்சத்து தொகுப்பு விநியோகம்,
வேளாண் கிராமங்களை உருவாக்குதல், மண் மற்றும் பயிர் ஆரோக்கியத்திற்கான நுண்ணுயிரிகளின் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பம், உழவர் அங்காடிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் .சிவப்பிரியா, வேளாண்மை இயக்குநர் திரு.பெ.தனுஷ்கோடி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) .தேவேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (யாஸ்மின் சகர்பான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இராமன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.