விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ஊட்டி கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.

இதற்கு மாவட்ட ஆட்சியர் அருணா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் கூறியதாவது:- தோட்டக்கலை துறை சார்பாக ஆத்மா கூட்டம் மற்றும் ஆத்மா தேர்தல் நடத்தப்படவில்லை. தோட்டக்கலைத் துறை மூலம் கேரட், புருக்கோலி, பீட்ரூட், பட்டாணி விதைகளை மானியத்தில் தர வேண்டும். தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்படும் அனைத்து மாநிலங்களையும் பிண்ணேற்பு மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரியில் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரட்சி நிவாரணமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரணமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துணைநீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு டீசல் அல்லது மின் மோட்டார் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இறுதியாக மாவட்ட ஆட்சியர் அருணா பதில் அளித்து பேசியதாவது:- 2023-24-ம் ஆண்டில் 3 மாவட்ட விவசாயிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் 12 வட்டார விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இரண்டு வருவாய் கிராமத்திற்கு ஒரு விவசாய நண்பர் வீதம் 27 விவசாய நண்பர்கள் உள்ளனர். தோட்டக்கலைத்துறை மூலம் வீரிய ரக கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற விதைகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நடப்பு ஆண்டிலும் வீரியரக விதைகள் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது.

தோட்டக்கலைத்துறை மூலம் அனைத்து திட்டங்களும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படியே செயல்படுத்தப்படுகிறது. பந்தல், பண்ணை குட்டை, பசுமைக்குடில், நிழல்வலை குடில், சிப்பம் கட்டும் அறை, குளிர்பதன கிடங்கு, குளிர்பதன வாகனம், பரப்பு விரிவாக்கம், பூண்டு, இஞ்சி மற்றும் ஸ்ட்ராபெரி, ஒருங்கிணைந்த சிப்பம் கட்டும் அறை, காளான் வளர்ப்பு கூடம், கார்னேசன், லில்லியம், முன்குளிர்வூட்டும் அறை, மண்புழு உரக்கூடாரம் போன்ற இனங்கள் பின்னேற்பு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. கூடலூரில் நடப்பு ஆண்டில் நோய் தாக்குதலால் பாகற்காய் பயிர்சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு வீரிய ரக காய்கறி விதைகள் மானியத்தில் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும். நடப்பு ஆண்டில் துைண நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு மட்டும் டீசல் அல்லது மின் மோட்டார் (50 சதவீத மானியம், ரூ.15 ஆயிரம்) வழங்க ரூ.5 லட்சம் இலக்கு பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதில் தோட்டக்கலை இணை இயக்குநர் சிபிலா மேரி,உதவி வன பாதுகாவலர் கிருபாகரன், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் தயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story