குமரியில் மணமகன் திடீர் மாயம்: நின்று போன திருமணம்
குமரி மாவட்டம், சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். தாய் தந்தையை இழந்த அவருக்கு திருமணம் செய்து வைக்க உறவினர்கள் ஏற்பாடு செய்தனர்.
பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கும் என்ஜினீயருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதையடுத்து இருவருக்கும் இன்று (24-ம் தேதி)திருமணம் செய்ய முடிவு செய்தனர். திருமணத்திற்காக சென்னையில் இருந்து மணமகன் ஊருக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்து திடீரென புதுமாப்பிள்ளை மாயமானார். மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் மணமகளின் வீட்டுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மணமகளின் குடும்பத்தார் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். திருமணம் நடைபெற இருந்த நிலையில் மாப்பிள்ளை மாயமானதால் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தனர். இந்த நிலையில் இன்று நடைபெறுவதாக இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. மாயமான மாப்பிள்ளையை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருமண நாளில் மாப்பிள்ளை எதற்காக மாயமானார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரை கண்டுபிடித்தால் தான் எதற்காக மாயமானார் என்ற விவரம் தெரியவரும். திருமண நாளில் மணமகன் மாயமான சம்பவம் சுசீந்திரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.