ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நிலக்கடலை ஏலம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நிலக்கடலை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில், நிகழாண்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் நிலக்கடலை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, தஞ்சாவூர் மாவட்ட வேளாண் விற்பனைக்குழு செயலாளர் மா.சரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் 6,540 ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலக்கடலையை விற்பனை செய்வதில் சிரமம் இருப்பதாக விவசாயிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், நிலக்கடலையை அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்ய ஏதுவாக, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறைக்கு உட்பட்ட தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும், தஞ்சாவூர், பூதலூர், வல்லம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட வணிகர்கள் மூலம் மறைமுக ஏலம் நடத்தி விற்பனை செய்துதர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விற்பனைக்கூட சேமிப்பு கிடங்குகளில் விளைபொருட்களை இருப்பு வைத்து, அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை பொருளீட்டுக் கடன் பெற்றுக் கொள்ளலாம். விற்பனைக் கூடங்களில் உள்ள உலர்களம், ஈரப்பதமானி, மின்னணு தராசு ஆகிய வசதிகளை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், தேசிய மின்னணு வேளாண் சந்தை(e-NAM) திட்டத்தில் தங்களது விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டுவரும் பட்சத்தில், வெளியூர் வணிகர்களை பங்குபெற செய்வதன் மூலம் அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்து தரப்படும். கூடுதல் விவரங்களுக்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர்களை பூதலூர் - 7010154909, 9943928959, ஒரத்தநாடு - 8667006488, வல்லம் 8220927373, ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர்களை தஞ்சாவூர் - 6380289219, பட்டுக்கோட்டை - 9487109673 ஆகிய எண்களில் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்" எனவும் தெரிவித்துள்ளார்.