தஞ்சாவூர் பகுதிகளில் நிலக்கடலை அறுவடை பணிகள் தீவிரம்
தஞ்சாவூர் பகுதிகளில் நிலக்கடலை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
தஞ்சாவூர் பகுதிகளில் நிலக்கடலை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் மட்டுமின்றி கரும்பு, உளுந்து, எள், மக்காச்சோளம், நிலக்கடலை சாகுபடியிலும் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தஞ்சாவூர் பகுதியில் நிலக்கடலை மார்கழி, சித்திரை என 2 பட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நாட்டுக்கடலை, குஜராத் நாட்டுக்கடலை, ஆந்திரா நிலக்கடலை, உள்ளிட்ட பல ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மழையின் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிலக்கடலை விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆள் பற்றாக்குறை காரணமாக ஆட்கள் மூலம் அறுவடை செய்து இயந்திரங்களை பயன்படுத்தி நிலக்கடலையை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது மார்கழி பட்டத்தில் விதைத்த நிலக்கடலைகளை அறுவடை செய்யும் பணிகள் நடந்து வருகிறது. தஞ்சை, சூரக்கோட்டை, மடிகை, காட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு ஏக்கர் நிலக்கடலையை இயந்திரம் மூலம் பிரித்தெடுக்க ரூ.3,600 முதல் ரூ.4000 வரை செலவாகிறது.
நிலக்கடலை மூலம் கிடைக்கும் கடலை எண்ணெய், கடலை புண்ணாக்கு உள்ளிட்டவைகளின் விலைகள் அதிகரித்து உள்ள போதிலும், உற்பத்தி செய்கின்ற விவசாயிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. இந்த ஆண்டு 80 கிலோ மூட்டை ரூ.7,400 முதல் ரூ.7,800 வரை விவசாயிகளிடம் இருந்து நிலக்கட லைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
இது கடந்த ஆண்டை விட விலை குறைவு. உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் லாபமும் மிக, மிக குறைவாக காணப்படும் நிலை உள்ளது. எனவே, தமிழக அரசு நெல்லுக்கு விலை நிர்ணயம் செய்வது போன்று, வரும் காலங்களில் ஆண்டுதோறும் நிலக்கடலைக்கும் விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினர்.