சேலம் மாவட்டத்தில் 270 மையங்களில் குரூப்-4 தேர்வு
பைல் படம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 பணிக்கான போட்டி தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்காக சேலம் மாவட்டத்தில் உள்ள 13 தாலுகாவிற்குட்பட்ட 270 தேர்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 361 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை 1 லட்சத்து 6 ஆயிரத்து 82 பேர் எழுதுகின்றனர். குரூப்-4 போட்டித்தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணி வரை நடக்கிறது.
தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு கூடத்திற்குள் வர வேண்டும். அதன்பிறகு வந்தால் தேர்வு மையத்துக்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வர்கள் தங்களது தேர்வு அனுமதி சீட்டினை கட்டாயம் எடுத்து வர வேண்டும். தேர்வை கண்காணிப்பதற்காக 5 அயிரத்து 310 அறை கண்காணிப்பாளர்களும், 361 தலைமை கண்காணிப்பாளர்களும், 89 நடமாடும் கண்காணிப்பு குழுக்களும், 20 பறக்கும் படைகளும், 14 கண்காணிப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டு உள்ளன.
தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுவதை வீடியோ மூலம் பதிவு செய்யப்படுகிறது. தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் எளிதாக செல்லும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.